×

கர்நாடகவில் பெரும் புயலை கிளப்பிய விவகாரம் : பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம்!!

பெங்களூரு :கர்நாடகாவில் பெரும் புயலை கிளப்பிய பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி எம்பியாக இருப்பவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில் பிரஜ்வல் மீதான பாலியல் புகார் தொடர்பாக தற்போது பென்டிரைவ் ஒன்று சிக்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. அதில், கடந்த 2019 முதல் 2022 வரை பல பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான 3,000 க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பிரஜ்வல் பற்றிய ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவ், அவரது கார் ஓட்டுனராக இருந்த கார்த்திக் மூலமே வெளியானது அம்பலம் ஆகியுள்ளது. பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் உள்ள பென் டிரைவை பாஜக நிர்வாகி தேவராஜேவிடமே தந்ததாக கார் ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார். பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா தவிர வேறு யாரிடமும் பென் டிரைவை வழங்கவில்லை என்றும் ஓட்டுனர் கார்த்திக் திட்டவட்டமாக வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கார்த்திக் பேசுகையில்,”15 ஆண்டு ரேவண்ணாவிடம் பணியாற்றி உள்ளேன். எனது சொத்தை பறித்துக்கொண்டதால் அங்கிருந்து விலகினேன். தேவராஜே கவுடா ஏற்கனவே ம.ஐ. தளத்துக்கு எதிராக போட்டியிட்டவர் என்பதால் அவரிடம் பென் டிரைவ் கொடுத்தேன்.

நிரூபர் சந்திப்பு நடத்தி ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக ரேவண்ணா குடும்பத்துக்கு தேவராஜே மிரட்டல் விடுத்தார். தேவராஜேவை தவிர வேறு யாரிடமும் பென் டிரைவை தரவில்லை,”இவ்வாறு தெரிவித்தார். மே 7-ல் 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலை உலுக்கி வருகிறது. கர்நாடகத்தில் 14 தொகுதிக்கு தேர்தல் முடிந்த நிலையில் எஞ்சிய 14 தொகுதிக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரஜ்வல் ஆபாச வீடியோவால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற பிரஜ்வலை நாடு கடத்தி கைதுசெய்ய வலியுறுத்தி பெங்களூருவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

The post கர்நாடகவில் பெரும் புயலை கிளப்பிய விவகாரம் : பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம்!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Prajwal ,Bangalore ,Hassan ,Revanna ,Janata ,Former ,Devakawuda ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு...